பெங்களூரு

மைசூர் மற்றும் பெங்களூரு மக்களுக்கு கன்னடம் பேசத் தெரியாது என மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கூறியதற்கு தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாஜக வின் மத்திய அரசில் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர் கர்னாடகத்தை சேர்ந்த ஆனந்தகுமார் ஹெக்டே.   இவர் கூறும் கருத்துக்கள் சர்ச்சையை கிளப்புவது வாடிக்கையாகி வருகிறது.  கர்னாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள புட்டூரில் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே, “கர்னாடகாவில் தக்சின கன்னடா, உத்தர கன்னடா மற்றும் ஷிமோகா பகுதி மக்கள் மட்டுமே கன்னடத்தை சரியாக பேசுகிறார்கள்.   மீதம் உள்ளவர்கள் பேசுவது கன்னடமே கிடையாது.   குறிப்பாக பெங்களூரு மற்றும் மைசூர் பகுதியில் உள்ளவர்களுக்கு கன்னடம் பேசவே தெரியாது.”  என உரையாற்றினார்.

இவரது இந்த உரை கன்னட மக்களிடையேயும்,  அனைத்துக் கட்சியினரிடையேயும்  கடும் சர்ச்சையை கிளப்பியது.    கடும் எதிர்ப்பு கிளம்பியதை ஒட்டி ஆனந்தகுமார் ஹெக்டே தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.  அதில், “எனது தாய்மொழியான கன்னட மொழிக்கு நான் என்றும் எதிரானவன் இல்லை.   மாறாக கன்னட மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவன்.   என் மொழியைக் காப்பதும் வளர்ப்பதும் என் கடமைகளில் ஒன்றாகும்.   நான் கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன.     எனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”  என பதிந்துள்ளார்.