டில்லி

100 நாள் வேலை திட்டத்தில் சாதி அடிப்படையிலான ஊதியம் வழங்கும் முறையை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

பொதுமக்களுக்கு 100 நாட்கள் பணிக்கு உறுதி அளிக்க மத்திய அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.   இதன் மூலம் கிராமப்புறங்களில் பல பணிகளை மாநில அரசு நடத்தி வருகிறது.  இந்த ஊதியத்துக்காக ஒவ்வொரு மாநிலமும் சாதி வாரியாக 3 நிதிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் உத்தரவு இட்டிருந்தது.  

இந்த மூன்று பிரிவுகள், பழங்குடியினர், பட்டியல் இனத்தவர் மற்ற பிற சாதியினர் என உள்ளது.  அந்தந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதியத்துக்கான நிதியைக் குறிப்பிட்ட கணக்குகளில் மத்திய அரசு செலுத்தி வந்தது.   இந்த நிதி ஒதுக்கீட்டில்  மத்திய அரசு பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு முதலில் நிதி ஒதுக்கீடு செய்வதால் அவர்களுக்கு விரைவில் ஊதியம் கிடைப்பதாகப் பல மாநிலங்களில் புகார்கள் எழுந்தன.

கடந்த 11 ஆம் தேதி இது குறித்து நடந்த கூட்டத்தில் பல மாநில அரசுகள் இந்த புகார்களை தெரிவித்துள்ளன.   இவ்வாறு சாதிவாரியான பிரிவுகளால்  மாநிலங்களில் சமூக பதட்டங்கள் உருவாகலாம் என மத்திய அரசை மாநில அரசுகள் எச்சரித்தன.   குறிப்பாக இந்த புகாரைத் தமிழகம்,, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநில அரசுகள் புகார் எழுப்பி உள்ளன.

இதன்  டிப்படையில் நவம்பர் 1 ஆம் தேதி அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,, “இனி ’ஒரே வருகை பட்டியல், ஒரே நேரத்தில் ஊதியம்’ என்னும் அடிப்படையில் மூன்று பிரிவுக்கான ஊதியத்துக்கான நிதியும் ஒரே கணக்கில் வழங்கப்படும்.   இதற்கு முந்தைய  மூன்று கணக்குகள் ஆணை ரத்து செய்யப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.