டில்லி:

அலுவலகம், வீடுகளுக்கு டிஜிட்டல் முகவரி திட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

‘பைலட் திட்டம்’ என்ற பெயரில் தபால் துறை சார்பில் ‘மேப் மை இந்தியா’ என்ற நிறுவனம் மூலம் அசையா சொத்துகளுக்கு மின்னணு முறையில் முகவரி வழங்க திட்டமிட்டுள்ளது. வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு 3 இலக்க பின்கோடு சேர்த்து 6 இலக்க ஆல்பா நியூமரிக் டிஜிட்டல் குறியீடு வழங்கப்படும்.

இந்த இணைப்பு முடிந்த பிறகு அவற்றின் பெயர், உரிமையாளர் பெயர், வரி விவரங்கள், மின்சாரம், குடிநீர் மற்றும் காஸ் குறித்த விவரங்களையும் அதோடு சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விவரங்களும் ஒரே தளத்தில் கொண்டு வர முடியும். இந்த 6 இலக்க குறியீட்டை கூகுள் மேப்பில் பதிவிட்டால், செல்ல வேண்டிய இடத்தை தெளிவாக காட்டிவிடும். சோதனை முயற்சியாக டில்லி மற்றும் நொய்டாவில் சில பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேப் மை இந்தியா நிர்வாக இயக்குநர் ராகேஷ் வர்மா கூறுகையில், ‘‘மின்னணு முறையில் இடங்களை தேடுவது என்பது, சுற்றுலா பயணிகள் மற்றும் பல இடங்களுக்கு செல்பவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அவர்கள் குறிப்பிட்ட இடங்களை தேடவும், பகிர்ந்து கொள்ள பயன்படுவதுடன், பணம், நேரம், எரிபொருள் செலவு குறையும்’’ என்றார்.