டெல்லி: பொங்கலுக்கு கட்டாய பொது விடுமுறை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு மத்திய பாஜ அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. தற்போது பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொதுவிடுமுறை என்பதை ரத்து செய்துவிட்டு விருப்ப விடுமுறையாக எடுத்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
தமிழகம் என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதையே வழக்கமாக வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் இறந்துபோக காரணமாக இருக்கிறது.

மீனவர் பிரச்சனையிலும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர மறுக்கிறது. அதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தயாராகவும் இல்லை.

இப்போது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்தில் கை வைத்திருக்கிறது. ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாள் அன்று கட்டாய பொது விடுமுறை என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது பொதுவிடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும் பொங்கல் தினத்தன்று விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். பொங்கல் விழாவை பொது விடுமுறை பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. விடுமுறை கட்டாயமல்ல என்றும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை என்றும் மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலுக்கு உயர் அதிகாரி விடுமுறை வழங்க மறுத்தால், பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன் அனுமதி பெற்றே பொங்கலுக்கு விடுமுறை பெற வேண்டும் என்ற நிலை மத்திய அரசு ஊழியர்களுக்கு உருவாகியுள்ளது.