ராம மோகன ராவின் மெகா ஊழல்! ஆதாரங்களுடன் சி.பி.ஐ.யில் புகார்!

Must read

அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஆதாரங்களை வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் செய்யப்படுகின்றன.தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்ய டெண்டர்முறை பின்பற்றப்படுகிறது. கடந்த 2013- ம் ஆண்டு, மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டிஸ் (Padmavathi Hospitality And Facility Management Services) என்ற நிறுவனத்துக்கு சுமார் 360 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் மகன் விவேக்கும் பாஸ்கர் நாயுடும் பங்குதாரர்கள். .இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

 

 

 

இந்த நிலையில் தான் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டிஸ்  நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் சி.பி.ஐ-யிடம் புகார்

அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் வழங்கி உள்ளனர்.

ராம மோகன ராவின் மகன் விவேக்கும், பாஸ்கர் நாயுடுவும் இணைந்து “Swan Facilities Pvt Ltd” என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து ராம மோகன ராவிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் “வருடத்திற்கு130 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் ஒருவருடத்துக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டரில் பங்கேற்ற ஆறு நிறுவனங்களில் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டிஸ் நிறுவனத்தை தவிர்த்து மற்ற ஐந்து நிறுவனங்களும் பிரைவேட் மற்றும் பப்ளிக் லிமிடட் நிறுவனங்கள் ஆகும்.

இதில் அதிர்ச்சிகரமான விசயம் என்னவென்றால், ஒப்பந்தத்தில் பிரைவேட் மற்றும் பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள்தான் பங்கேற்கவேண்டும் என்பது விதிமுறை.ஆனால் (Proprietorship ans partnership) பிரப்ரைட்ரி பார்டனர்ஷிப் நிறுவனங்களும் ஒப்பந்ததில் பங்கேற்கலாம் என விதிமுறைகள் திருத்தப்பட்டிருக்கிறது. அது குறித்த ஆதாரங்களைத்தான் சி.பி.ஐ- யிடம் வழங்கியுள்ளோம்.

தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன்தான் (Tamilnadu Medical Services Corporation) இதற்கான ஒப்பந்ததை முடிவு செய்யும். இந்த நிலையில், ராம மோகன ராவ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அனுமதி வாங்கித் தந்திருக்கிறார்.

100 துப்புரவாளர்கள் தேவைபடுகிற அரசு மருத்துவமனையில் வெறும் 50 பேர் 30 பேர் என ஆட்களை நியமித்திருக்கின்றனர். அதற்காக போலியான பணியாளர் பதிவேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் பல உயர் அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளதாகவும் எங்களுக்கு தெரிய வந்துள்ளது” என்றார்.

 

 

 

More articles

Latest article