புனே: கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரித்து வரும் நிறுவனமான சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தடுப்பூசியின் விலையை இரு மடங்காக திடீரென உயர்த்தி உள்ளது.

நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில்,  சீரம் நிறுவனத்துக்கு மத்தியஅரசு ரூ.3ஆயிரம் கோடி நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த நிலையில்,  கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு அதிகரித்து சீரம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  தற்போதைய நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு,  கோவாக்சின்  ஆகிய க 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் இந்தியா 5 கோடி டோஸ் தடுப்பூசி பெற முதல்கட்டமாக ஒப்பந்தம் செய்தது.  தொடர்ந்து  சீரம் நிறுவனத்துடன் இந்திய அரசு மிகப்பெரிய அளவில் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளதால்,அதன்படி, ஒரு டோஸ் விலை ரூ.250 என்ற விலையில், இந்திய அரசுக்கு சீரம் நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டே போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது, கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை திடீரென உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவிப்பு பெளியிட்டுள்ளது. அதன்படி,  ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை, அரசுக்கு ரூ.400 எனவும்,  தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி தயாரித்து  இரண்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கும் மத்திய நிதி தொகுப்பில் இருந்து மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.  அதன்படி, சீரம் நிறுவனத்துக்கு ரூ. 3  ஆயிரம் கோடி ஒதுக்கி மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்,  தடுப்பூசியின் விலையை இருமடங்கு உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசிடமே நிதி உதவி  பெற்றுக்கொண்டு, விலையையும் உயர்த்தி உள்ளது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 

சீரம் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் ரூ.1,500க்கும், ரஷ்யா மற்றும் சீனாவில் ரூ.750க்கும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலையை ஒப்பிட்டு, இந்தியாவில் விலையை கூட்டியிருப்பதாக  சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.4,500 கோடி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்…