டெல்லி: சி.பி.எஸ்.இ 2026 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவிய நிலையில், இன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10, 2026 வரை நடைபெற்றன. அனைத்துத் தேர்வுத் தாள்களும் காலை 10:30 மணிக்குத் தொடங்கி, ஒரே அமர்வில் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், தேர்வர்கள் cbse.gov.in மற்றும் results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை results.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண் (Roll number), பிறந்த தேதி மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு முக்கிய சீர்திருத்தமாக, இந்த ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய திரைவழி மதிப்பீட்டு (On-Screen Marking – OSM) முறையை அறிமுகப்படுத்துவதாக சி.பி.எஸ்.இ (CBSE) அறிவித்திருந்தது. அதன்படி, இந்த முறை 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் பாரம்பரிய நேரடி முறைக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன. இருப்பினும், 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் வழக்கம் போல நேரடி முறையிலேயே மதிப்பீடு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு, 12-ஆம் வகுப்புத் தேர்வில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.64% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.70% ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் எவ்வளவு என்பது சில மணி நேரங்களில் தெரிய வரும்.
இதற்கிடையில், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதியை உறுதிப்படுத்த சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
அதாவது, 2026 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான திரைவழி மதிப்பிடும் முறையைச் செயல்படுத்துவதை எளிதாக்கும் வகையில், போதுமான டிஜிட்டல் உள்கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியது.
மதிப்பீட்டு வளாகத்தில் செயல்படும் கணினிகள் அல்லது மடிக்கணினிகள், நிலையான இணைய இணைப்பு மற்றும் நம்பகமான மின்சாரம் உள்ளிட்ட தேவைகளை கொடுப்பது அவசியம். மதிப்பீட்டுக் காலத்திற்கு முன்னதாக ஆசிரியர்கள் ஓஏஎஸ்ஐஎஸ் (OASIS) இணையதளத்தில் பதிவுசெய்து, அதைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மதிப்பீட்டாளர்களுக்காக, சிபிஎஸ்இ ஒத்திகைகள், பயிலரங்குகள், அறிவுறுத்தல் காணொளிகள் மற்றும் ஒரு பிரத்யேக அழைப்பு மைய ஆதரவு அமைப்பு ஆகியவற்றின் மூலம் பயிற்சியை வழங்கியது.
2026-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ‘கம்பார்ட்மென்ட்’ (Compartment) பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுவார்கள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் பொதுவாக ஜூலை மாதம் நடத்தப்படும் துணைத்தேர்வில் (Compartment Examination) கலந்து கொள்ளலாம். இந்தத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், மாணவர்கள் மீண்டும் ஒரு வருடம் முழுவதும் படிக்க வேண்டிய அவசியம் இன்றி, அதே கல்வி ஆண்டிலேயே தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுவார்கள்.
முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த விரிவான தகவல்களை cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
[youtube-feed feed=1]