சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அறப்போர் இயக்கம் தொடர்ந்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் 2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகாரில் CBI முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய அறப்போர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை,, ஊழலுக்கான மூகாந்திரம் இல்லை என கூறிய நிலையில், அதை புறந்தள்ளிய நீதிபதிகள், ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். இது திமுக அரசுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு, தகுதியற்ற நிறுவனங்களிடம் டெண்டர் வழங்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த கொள்முதல் ஊழலில் காசி என்பவர் முக்கிய புள்ளியாக செயல்பட்டதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அறப்போர் இயக்கத்தின் தரப்பில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
அதிமுக நிர்வாகி சரவணன் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார்களை முடித்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்துள்ளது, நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை காத்திருந்திருக்கலாம், அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களையும் வழங்கி இருக்கிறது, அமைச்சர், மின்வாரிய உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மின்வாரியமான டான்ஜெட்கோ தரப்பில், 2021-2023ஆம் ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறுவது தவறு. அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இருவரும் அரசியல் உள்நோக்கத்தோடும், விளம்பர நோக்கத்தோடும் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையை குறிப்பிடுவது என்பது 1987ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறை என்று வாதிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லாததால், புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்குகளில் தீர்ப்பை இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
அதில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டு வாரத்துக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
சிபிஐ புலன் விசாரணைக்கு தமிழக அரசும் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
[youtube-feed feed=1]