டில்லி:

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள  பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மேலும்,பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில்,  ராஜீவ் கொலை வழக்கு மீண்டும் விசாரணை செய்யும் உத்தேசம் இல்லை என்று சிபிஐ உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. பேரறிவாளன் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டால் கொல்லப்பட்டார். இது குறித்த வழக்கில்,  இந்த வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த கைதிகள் நீண்ட காலமாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வந்த நிலையில், அப்போதைய முதல்வர் ஜெயலிதா,  கடந்த 2014ம்  ஆண்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி,  தமிழக சட்டமன்றத்தில்தீர்மானம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், மத்திய அரசு பதில் தெரிவிக்காத நிலையிலி,  இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக ஒரு தீர்ப்பு வழங்குமாறு  உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில், ராஜீவ் கொலை கைதி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தங்களை விடுதலை செய்யக்கோரியும், தனது மீதான சிபிஐ விசாரணையில் குளறுபடி உள்ளதால், மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்த வழக்கில், கடந்த ஜனவரி 23ந்தேதி விசாரணையின்போது, மத்திய அரசின் கருத்தை இன்னும் 3 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தியும், ராஜீவ் கொலை கைதிகளை தானும், பிரியங்காவும் மன்னித்து விட்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், ராஜீவ் கொலை விசாரணையை மீண்டும் விசாரிக்கும் எண்ணம் இல்லை என்று சிபிஐ சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பேரறிவாளன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.