பெங்களூரு: உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான ஆனந்த் குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர் சிபிஐ அதிகாரிகள்.

இந்த வழக்கறிஞர்கள் இருவரும், இதர சில வழக்கறிஞர்களுடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நிதியுதவி பெறப்படுகிறது என்றும், அதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், ஆனந்த் குரோவர் மீது சிபிஐ வழக்குப் பதிவும் செய்தது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சகமும் இவர்களின் மீது புகார் தெரிவித்தது. உச்சநீதிமன்றமும் வழக்கறிஞர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. சிபிஐ அமைப்பு இதுதொடர்பான வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தது.

இந்நிலையில்தான், இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் மற்றும் அறக்கட்டளையுடன் தொடர்புடைய இதர வழக்கறிஞர்களின் மும்பை மற்றும் டெல்லி இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது.

நரேந்திர மோடி அரசு பதவியேற்றது முதல், வெளிநாட்டு நிதியுதவி பெறும் என்ஜிஓ நிறுவனங்கள் மீது கடும் கண்காணிப்பு கொண்டுவரப்பட்டு, பலவற்றின் பதிவும் ரத்துசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.