வுரங்காபாத்

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு அவுரங்காபாத் நகரில் மளிகை வாங்கியதற்கான பாக்கி ரூ.200 ஐ கென்யா நாட்டு எம் பி ரிச்சர்ட் டோங்கி திருப்பி அளித்துள்ளார்.

                           காசிநாத் குடும்பத்தினருடன் டோங்கி

கென்யா நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி என்பவர் அவுரங்காபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் கல்லூரியில் மேலாணமை பட்டப்படிப்பு படித்து வந்தார்.   அவர் அப்போது அங்கிருந்த காசிநாத் என்பவரின் மளிகைக் கடையில் மளிகை வாங்கி வந்தார்.   காசிநாத் அப்போது அங்கிருந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவி செய்து வந்தார்.  டோங்கிக்கு தங்க அவர் வீடு பிடித்து தந்துள்ளார்.

மாணவர்கள் அனைவரும் அவரை காசிநாத் சித்தப்பா என அழைத்து வந்துள்ளனர்.  வறுமை காரணமாக டோங்கி தவித்த போது காசிநாத் கடனில் மளிகை சாமான் கொடுத்துள்ளார்.  படிப்பு முடிந்து நாடு திரும்பும் போது ரூ.200 பாக்கியை திருப்பி தர முடியாத நிலையில் இருந்த டோங்கி அதை தராமல் நாட்டை விட்டு சென்று விட்டார்.

அதன் பிறகு கென்யாவில் அரசியலில் இறங்கிய டோங்கி தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஆகி  உள்ளார்.   பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை துணைத்தலைவரான இவர் பிரதமர் மோடியின் அழைப்புக்கு இணங்க இந்தியா வந்து ஒரு கருத்தரங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.   இந்தியா வந்த டோங்கி மற்றும் அவர் மனைவி மிச்சேல் ஆகிய இருவரும் அவுரங்காபாத் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தனக்கு உதவி செய்த காசிநாத் சித்தப்பாவை இரு தின தேடலுக்கு பிறகு கண்டு பிடித்துள்ளார்.  இவரை காசிநாத்துக்கு அடையாளம் தெரியவில்லை.  அதன் பிறகு பழைய நினைவுகளைக் கூறி டோங்கி அவர் நினைவுக்கு வந்துள்ளார்.  டோங்கி தாம் தரவேண்டிய பாக்கியான ரூ.200 ஐ திருப்பி கொடுத்துள்ளார்.  அதை காசிநாத் வாங்க மறுத்துள்ளார்.

ஆயினும் அவர் குழந்தைகளுக்கு பரிசாக டோங்கி தம்பதிகள் சுமார் 19200 யூரோவை அளித்து விட்டு திரும்பி உள்ளனர்.  இது குறித்து மிச்சேல், “என் கணவருக்கு காசிநாத் சித்தப்பா செய்த உதவிகளை என்னிடம் கூறி உள்ளார். எங்களால் அவரை மறக்க முடியாது.  அவரை நான் காண விரும்பினேன்.   நாங்கள் தர வேண்டிய பணத்தைக் கூட அவர் வாங்க மறுத்தது எனக்கு கண்ணில் நீரை வரவழைத்தது” என கூறி உள்ளார்.