கன்னடனே…..  உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!: கவிஞர் ஆரா

Must read

06-tamil-nadu-bans-illegal-sand3-600

இத்தனை டி.எம்.சி.
ரத்தம் திறந்துவிடு என்று
எந்த நீதிமன்றம்
உத்தரவிட்டது?

தமிழக 
வாகனங்களை
மட்டுமே எரிக்கும்
தீ 
எந்த குச்சியிலிருந்து 
பிரசவிக்கப்பட்டது?

நீ எதிரிதான்,
உன் ஒற்றுமையைப்
பாராட்டுகிறேன்!

உன் பக்கம் 
நியாயம்
இல்லையென்றாலும்
ஒற்றுமை இருப்பதால்
வெறியூட்டும் குழுக்களாய்
எரியூட்டுகிறாய்!

காவிரிருக்கு அருகில்
கிளைநதிகள் தூர்வாரினாய்…
ஏரிகள் ஆழம் செய்தாய்!
தடுப்பணைகள் திருத்தினாய்!
பூமிப் பாத்திரத்திலேயே
பெரும்காவிரி பிடித்து வைத்தாய்! 
இவ்வளவு தண்ணீர்
பிடித்துவைத்தும்
மிச்சத்தைக் கூட
தர மனமின்றி
காவிரியைக் கைது செய்தாய்!

நாங்கள் ஒக்கேனக்கலில்
சாயத் தொழில் செய்வோம்…
பவானியை பழுதாக்குவோம்…
மேட்டூர் அணையை
மண்ணால் நிரப்புவோம்!
கரூரில்
மணல் அள்ளித் தின்போம்!
கொள்ளிடத்தில் 
கொல்வோம்!
பூம்புகாரில் 
திவசம் செய்வோம்!

அங்கே,
காவிரிக்காக
அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து
தீ வைக்கிறீர்கள்!
இங்கே
காவிரியின் உடலுக்கு
ஒவ்வொரு கட்சியும்
தனித்தனியே பூவைக்கின்றன!

உன் மிச்சத் தண்ணீர் குடித்தும்
இன்னும்
உன் ஒற்றுமை வெறியைக்
கற்கவில்லை 
கன்னடனே!

இந்த முறை வரும்
காவிரித் தண்ணீர் குடித்தாவது,

நீர் நிலைகளை பாதுகாக்கவும்
அதற்காய்
போர் நிலைகளை கூர் தீட்டவும்
நாங்கள்
கற்றுக் கொள்ளவில்லை எனில்…

உன்னைச் சொல்லிக்
குற்றமில்லை!

More articles

Latest article