டெல்லி: நாளை காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் நாளை மறுதினம் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டு பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ந்தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  4 மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, மத்தியஅரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு என 2 ஆக பிரித்து தனித்தனியாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவுக்கு தலைவராக மத்திய ஜல்சக்தித்துறை தலைவர் இருந்து வருகிறார். இநத் ஆணைய கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தின்போது அடுத்த கூட்டத்தை 24-ந் தேதி (நாளை மறுநாள்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அடுத்த கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காணொலி மூலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து 27ந்தேதிகாவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டிய பாக்கி நீரை திறந்துவிட தமிழகஅரசு வலியுறுத்தும் என தெரிகிறது.