எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை தாமதமின்றி விரைந்து முடியுங்கள்! சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Must read

சென்னை:  எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

எம்பி.எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள், அவதூறு வழக்குகள் போன்றவற்றை விரைந்து விசாரிக்க அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நீதிமன்றங்களிலும் மற்ற வழக்குகளின் விசாரணைகள் போலவே ஆண்டுகணக்கில் விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி   மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணை குறித்து  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து   விசாரித்தது. இந்த  வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி   அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றப் பதிவுத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பதவிகள் நிரப்பப்பட்டு விட்டதாகவும், சிறப்பு நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிற உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கைத் தொடர வேண்டிய அவசியமில்லை எனக் கூறி, முடித்து வைத்தனர். மேலும், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள், விசாரணையை விரைந்து நடத்தி, தாமதமின்றி முடிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

More articles

Latest article