டெல்லி:  2நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கட்டப்பட்டு வரும் திமுக அலுவலுகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மனைவி துர்கா உள்பட கட்சியின் எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் சென்றனர்.

சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் மனைவி மற்றும் மூக்கிய நபர்களுடன் டெல்லி பறந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்  இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக இன்று காலை டெல்லி  சென்ற அவருக்கு விமான நிலையில்., அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், தமிழ்நாடு இல்லம் சென்ற அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை  கொடுக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி தீன்தாயாள் உபாத்தியா மார்க்கில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை தனது மனைவி துர்காவுடன் நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த மாதம் திறப்பு விழா நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.