ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS, MD படிப்புகளை தொடங்க திட்டம்

ஏறக்குறைய 70 ஆண்டுகளாக பொறியியல் கல்விக்கு பெயர் பெற்றுள்ள சென்னை ஐ.ஐ.டி., தற்போது மருத்துவக் கல்வியிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவ அறிவியல் பள்ளி (School of Medical Sciences) தொடங்கி, அதன் மூலம் MBBS, MD மற்றும் PhD போன்ற மருத்துவப் படிப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஐ.ஐ.டி. மெட்ராஸ் நிச்சயமாக மருத்துவ அறிவியல் பள்ளியை தொடங்கும். மருத்துவப் பட்டங்களை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது ஐ.ஐ.டி. மெட்ராஸை மேலும் பெரிய நிறுவனமாக மாற்றும்” என்றார்.

ஏற்கெனவே மருத்துவத் துறையில் படிப்பு

இதற்கான அடித்தளம் ஏற்கெனவே ஐ.ஐ.டி. மெட்ராஸில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடங்கப்பட்டது.

இதில் 4 ஆண்டுகள் கொண்ட இளங்கலைப் படிப்பு வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் பொறியியல் மற்றும் உயிரியல் ஆகிய இரு துறைகளையும் இணைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மருத்துவக் கருவிகள், மருத்துவப் படமெடுக்கும் தொழில்நுட்பம், உடலில் பொருத்தப்படும் மருத்துவ சாதனங்கள், மருத்துவத் துறைக்கான மென்பொருட்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கும் வகையில் இந்த மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். ஆனால், இவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாக உருவாக்கப்படவில்லை.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள மருத்துவப் பள்ளி மூலம், நேரடியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை உருவாக்குவதே ஐ.ஐ.டி.யின் நோக்கம்.

பொறியியல் நிறுவனமான ஐ.ஐ.டி. ஏன் மருத்துவப் படிப்பை தொடங்குகிறது?

இதற்கான காரணத்தை விளக்கிய பேராசிரியர் காமகோடி, “எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் மருத்துவப் பள்ளியை தொடங்க வேண்டும். இல்லையென்றால், மருத்துவத் துறையில் உலகச் சந்தையுடன் போட்டியிடும் வகையில் இந்தியாவால் முன்னேற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் உயர்தர மருத்துவ உபகரணங்களுக்கு இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்தது தெரியவந்தது. இதனால், இந்தியாவிலேயே நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

மருத்துவக் கருவிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க, மருத்துவர்களும் பொறியாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ஐ.ஐ.டி. மெட்ராஸின் திட்டமாக உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி தேவை

எனினும், ஐ.ஐ.டி. மெட்ராஸ் தன்னிச்சையாக MBBS படிப்பை தொடங்கிவிட முடியாது.

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) அனுமதி கட்டாயம். மேலும், மருத்துவ மாணவர்கள் நேரடியாக நோயாளிகளிடம் பயிற்சி பெறுவதற்கு முறையான கற்பித்தல் மருத்துவமனையும் (Teaching Hospital) இருக்க வேண்டும்.

ஐ.ஐ.டி. கரக்பூர் இதற்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. அந்த நிறுவனம் சொந்தமாக மருத்துவமனை அமைத்து, முதுநிலை MD படிப்புக்கு அனுமதி பெற்றுள்ளது. ஆனால், MBBS படிப்பை தொடங்குவதற்கான திட்டம் இன்னும் உள்கட்டமைப்பு தேவைகள் காரணமாக நிலுவையில் உள்ளது.

எனவே, ஐ.ஐ.டி. மெட்ராஸும் முதலில் தேவையான மருத்துவமனை மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்கி, அதன் பிறகு NMC அனுமதியைப் பெற வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே வலுவான அடித்தளம்

ஐ.ஐ.டி. மெட்ராஸில் ஏற்கெனவே சுகாதாரத் தொழில்நுட்ப மையம், மூளை வரைபடம் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும், சென்னையில் உள்ள முன்னணி மருத்துவமனைகளுடனும் ஐ.ஐ.டி. இணைந்து பணியாற்றி வருகிறது.

இதனால், பொறியியல் மற்றும் மருத்துவத் துறைகளை ஒரே இடத்தில் இணைத்து, மருத்துவமும் தொழில்நுட்பமும் தெரிந்த புதிய தலைமுறை மருத்துவர்களை உருவாக்க முடியும் என்று ஐ.ஐ.டி. மெட்ராஸ் நம்புகிறது.

NMC அனுமதி கிடைத்து இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஐ.ஐ.டி. மெட்ராஸின் செயல்பாட்டில் மட்டுமின்றி, இந்தியாவின் மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இது முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.