தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தனியார் பள்ளி முதல்வர் ரூபா ரெட்டி வீட்டில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டில் ஈடுபட்டதை முதல்வர் கண்டுபிடித்ததால் அவரை கொலை செய்ததாக மாணவர்கள் மீது போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரூபா ரெட்டி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் 27 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வழக்கில் முக்கிய தடயமாக, ரூபா ரெட்டி இறுதியாக தனது அத்தையுடன் பேசிய தொலைபேசி உரையாடல் அமைந்தது. செல்போன் அணைக்கப்படுவதற்கு சற்று முன்பு, அத்தையிடம் பேசும்போது ரூபா ரெட்டி “பாபு” என்ற வார்த்தையை கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

“பாபு” என்பது மாணவர்களையும் அழைக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தை என்பதால், பள்ளி மாணவர்கள் யாருக்காவது இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ரூபா ரெட்டியுடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரது தினசரி நடவடிக்கைகள் குறித்து அறிந்தவர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, கொலை நடந்த பிறகு அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் திடீரென அதிக அளவில் பணம் செலவு செய்ததும், நண்பர்களுடன் ஆடம்பரமாக வெளியே சுற்றியதும் போலீசாரின் கவனத்துக்கு வந்தது.

“கொலைக்குப் பிறகு இரு மாணவர்களும் திடீரென அதிகமாக பணம் செலவு செய்து நண்பர்களுடன் விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புதன்கிழமை காலை இருவரையும் பிடித்து விசாரித்தோம்” என்று நல்கொண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரத் சந்திர பவார் தெரிவித்தார்.

இரு மாணவர்களில் ஒருவரிடம் இருந்து ரூ.1.51 லட்சம் ரொக்கம் மற்றும் ஐபோன் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை தனது பெற்றோர் கொடுத்ததாக மாணவன் முதலில் கூறியுள்ளார். ஆனால், பணத்தில் மனித ரத்தத்தின் தடயங்கள் இருப்பது தடயவியல் பரிசோதனையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இரு மாணவர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக போலீசார் கூறினர். அவர்களில் ஒருவருக்கு பைக் மற்றும் கார்களை ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்ததுடன், விரைவாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு சுமார் 15 நாட்களுக்கு முன்பே அந்த மாணவன் ரூபா ரெட்டியின் கண்காணிப்புக்கு வந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த மாணவன் பையில் செல்போன் மற்றும் பணம் வைத்திருந்ததை முதல்வரும் சில பள்ளி ஊழியர்களும் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவனை கண்டித்த ரூபா ரெட்டி, அவரை விடுதியில் இருந்து மாற்றி, பள்ளிக்கு வழக்கமான வகுப்புகளுக்கு மட்டும் வரவழைக்க முடிவு செய்ததாகவும், அவரது நடவடிக்கை குறித்து பெற்றோருக்கும் தகவல் தெரிவித்ததாகவும் போலீசார் கூறினர்.

இந்த சம்பவம் ரூபா ரெட்டியை குறிவைக்க அந்த மாணவனை தூண்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆகஸ்ட் 11-ம் தேதி பள்ளிக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அன்று ரூபா ரெட்டியின் வீட்டில் அதிக அளவில் பணம் இருக்கும் என அந்த மாணவன் நினைத்ததாக கூறப்படுகிறது.

கொலைக்கு சுமார் 5 நாட்களுக்கு முன்பே இரு மாணவர்களும் கொலைத் திட்டத்தை தீட்டியதாக போலீசார் தெரிவித்தனர். கையுறைகள் மற்றும் கத்தியை வாங்கிய அவர்கள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடங்களையும் ஆய்வு செய்து, போலீசிடம் சிக்காமல் இருப்பதற்கான வழிகளைத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 11-ம் தேதி ஒரு மாணவன் வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி உள்ளே சென்றதாகவும், மற்றொரு மாணவன் வெளியில் காத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். வீட்டுக்குள் சென்ற மாணவன் பணத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது, தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ரூபா ரெட்டி அவனைப் பார்த்துள்ளார்.

தன்னை அடையாளம் கண்டுகொண்டு திருட்டு குறித்து போலீசில் புகார் செய்துவிடுவார் என பயந்த மாணவன், கத்தியால் ரூபா ரெட்டியை தாக்கியதாக போலீசார் கூறினர். இதில் அவர் 27 முறை கத்தியால் குத்தப்பட்டதாகவும், பின்னர் சுமார் ரூ.2.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மாணவன் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

கொலைக்குப் பிறகு, தான் அணிந்திருந்த ஆடைகளை ஒரு கால்வாயில் வீசி தடயங்களை அழிக்க மாணவன் முயன்றதாகவும் போலீசார் கூறினர்.

இரு மாணவர்களும் தற்போது பிடிபட்டு, சிறார் நீதிக் குழுமத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை சிறார் இல்லத்துக்கு மாற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.