மதுரை:

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள்  உள்பட பலரிடம் மாமூல் வாங்கும் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட  நீதிமன்றம் காவலர்கள் மாமூல் வசூல் செய்வது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது என்று காவல்துறையினர் மீது மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்தார்.

சேலம் நகர குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமசாமி என்பவர், பணிக் காலத்தின்போது மாமுல் வாங்கிய குற்றத்துக்காக பதவி உயர்வு தடை செய்யப்பட்ட நிலையில், அதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழ்நாட்டில், காவல்துறையினர் பொது இடங்களில் மாமூல் வசூலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று என கடுமையாக சாடினார்.

காவல்துறையினர் மாமூல் வசூலிப்பது காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது என  கூறிய நீதிபதி, இப்படி இருக்கும் போது மக்கள் எப்படி காவல்துறையினரை நண்பர்களாக பார்ப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மாமூல் வசூல் மற்றும் லஞ்சம் வாங்கும் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய, அதிகாரி களுக்கு, உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், மாமூல் வசூலிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி சுப்பிரமணியத்தின் அதிரடி கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.