லக்னோ:

வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களும் ஓட்டுச் சீட்டு முறையில் தான் நடக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘எந்திரங்களின் மென்பொருள் எப்போது பழுதாகும் என்று யாராலும் கூற முடியாது. எந்திரத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது.

அதை நம்ப முடியாது. ஓட்டுச் சீட்டு முறை மீது தான் நூறு சதவீதம் நம்பிக்கை உள்ளது. அதனால் எதிர்கால தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறைப்படி தான் நடக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். வாக்குப்பதிவு எந்திரம் நல்லதா? கெட்டதா? என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை’’ என்றார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை அகிலேஷ் தொடங்கி வைத்தார். அனைத்து பிரிவு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், பணிகள் குறித்து ம க்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கட்சி உறுப்பினர்கள் பேஸ்புக் மற்றும் மிஸ்டுகால் முறை மூலம் சேர்க்கப்பட்டனர்.

அகிலேஷ் கூறுகையில் ‘‘மாவட்ட தலைநகரங்களில் 20 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கிராமங்களில் 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மின்சாரம் துணை மின் நிலையங்ளில் இருந்து வழங்கப்படுகிறது. ஆனால் சமாஜ்வாடி ஆட்சியில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் மூலம் தான் மின் விநியோகம் நடக்கிறது. அந்த அளவுக்கு மின்சார துறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்ட போது அவர் பதில் கூறுகையில், ‘‘ கோரக்பூரில் ஒருவர் காரில் வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் சமாஜ்வாடி ஆட்சியிலும் நடந்துள்ளது. ஆனால், அப்போது மீடியாக்கள் இதை பெரிதுபடுத்தின. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இளம்பெண்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘ஆண்டி ரோமியோ’’ திட்டத்தின் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.