டெல்லி: எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு  இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து,  நிராகரித்துவிட்டது.  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.  அவர், அதிமுக ஓபிஎஸ் என தனது அணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அடுத்தடுத்து, நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு மனுக்களை தாக்கல் சய்து வந்தார்.

சமீபத்தில், ‛‛ நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., எனவே இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் வழங்க வேண்டும்”, என ஒரு மனுவும், ‛‛ பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தரக்கூடாது. அ.தி.மு.க.,வுக்கான உரிமை கோரி நடைபெறும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைகாரணம் காட்டி, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், வரும் லோக்சபா தேர்தலில், எங்களுக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும்” என்று மற்றொரு மனுவிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த மனுக்களை நிராகரித்த தேர்தல் ஆணையம்,  எடப்பாடி பழனிச்மி தலைமையிலான அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதுடன், எங்களிடம் உள்ள ஆவணங்களில் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுக  பொதுச்செயலாளர் என கூறி ஓபிஎஸ் மூக்கை உடைத்துள்ளது.

ஓபிஎஸ் பா.ஜ., கூட்டணியில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் தனக்கு வாளி சின்னம் கோரியிருந்த நிலையில், அதுவாவது கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.