குர்தாஸ்பூர்

குர்தாஸ்பூர் மக்களவை உறுப்பினரான நடிகர் சன்னி தியோல் தனது பணிகளை கவனிக்க பிரதிநிதியை நியமித்ததற்கு காங்கிரஸ் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சன்னி தியோல் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  தம்மை எதிர்த்து  போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜால்கரை இவர் 82,459 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

சன்னி தியோல் வெற்றி பெற்றதும் இனி தொகுதி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கப் போவதாகவும் வாக்காளர்களின் அனைத்து குறைகளையும் தாமே கவனிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.   இந்நிலையில் சன்னி தியோல் ஒரு அறிக்கையை வெளியிட்டதால் தொகுதி பரபரப்பு அடைந்துள்ளது.

சன்னி தியோல் தனது அறிக்கையில், “நான் குர்பிரீத் சிங் பால்ஹரி என்பவரை தொகுதியில் நடைபெறும் சந்திப்புக்கள் மற்றும் முக்கிய விவகரங்களை கவனிக்க  எனது பிரதிநிதியாக நியமிக்கிறேன்.   சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மற்றவர்களுக்கும்  நான் இந்த அறிக்கை மூலம் இதை தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில அமைச்சர் சுகிந்தர் சிங், “மக்களின் குறைகளை நேரடியாக கவனிக்கிறேன் என சன்னி தியோல் கூறி இருந்தார்.  ஆனால் தனக்கு பதிலாக பிரதிநிதியை நியமித்தது மூலம் சன்னி தியோல் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.” என கூறி உள்ளார்.

சன்னி தியோலால் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பால்ஹரி, “என்னை உள்ளூரில் நடைபெறும் அவசர விவகாரங்களை கவனிக்க என்னை சன்னி தியோல் நியமித்துள்ளார்.   இது அவர் 24 மணி நேரமும் தொகுதியில் இருப்பதற்கு ஒப்பானது.  அவர் ஒவ்வொரு மாதமும் தொகுதிக்கு வந்து மக்கள் குறைகளை கேட்டறிவார்” என தெரிவித்துள்ளார்.