டில்லி

டந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு தற்போது புது முதலீடுகள் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஐந்தாம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட உள்ளது.   தற்போதுள்ள நிலையில் இந்த அறிக்கை முதலீட்டாளர்களை கவரும் வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்க படுகிறது.  தற்போது மிகவும் சரிவை சந்தித்து வரும் இந்திய பொருளாதாரம் சீரடைய இத்தகைய அறிவிப்புக்கள் வெளிவரும் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பொருளாதார கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது புதிய முதலீடுகள் வெகுவாக குறைந்துள்ளன.    இந்த வருடம் ஜுன் மாதம் இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ரூ.43400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தன.

இது முந்தைய மார்ச் மாதம் வரையிலான காலாண்டை விட 81% குறைவானதாகும்.   சென்ற வருடம் இதே காலகட்டத்தை விட 87% குறைவானதாகும்.    இந்த திட்டங்களின் மதிப்பு பிறகு மாற்றப்படலாம் என கூறப்பட்டாலும் புதிய முதலீட்டாளர்களிடையே இதில் முதலீடு செய்ய விருப்பம் இல்லாத நிலை உள்ளது.

இவ்வாறு குறைந்த அளவிலான திட்டங்கள் அறிவிப்புக்கும் முதலீடுகளே காரணமாக உள்ளன.   இதற்கு முந்தைய காலாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு முதலீடு அளிப்பது 77% குறைந்துள்ளது.   அதனால் இந்த திட்டங்கள் மதிப்பு குறைவாக அமைக்கப்பட்டுள்ளன.  ஆயினும் இம்முறையும் புதிய முதலீடுகள் அதிக அளவில் கிடைக்காத நிலை உள்ளது.

தேர்தல் நேரம் என்பதால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் முதலீடுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.   இந்த நிலை 2009 மற்றும் 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் இருந்தாலும் இந்த அளவுக்கு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.