சென்னை,

மிழக அரசு பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொது மக்கள்  போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஏற்கனவே அரசியல் கட்சியினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருப்பதால் போராட்டம் தீவிரமடையும் சூழல் உருவாகி உள்ளது.

இன்று காலை திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மார்சிய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அதுபோல தஞ்சாவூரில் கல்லூரி மாணவிகள்  அரசு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.   தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சை அருகே உள்ள திருவாரூரிலும் தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் அரசு சிக்கண்ணா கலை கல்லூரி  மற்றும் தனியார் கல்லூரி  மாணவர்கள் புதிய பஸ் நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பஸ் கட்டண உயர்வு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

மேலும்,  அரியலூர் அருப்புக்கோட்டை பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் அருகே   பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இன்று தமிழகம் முழுவதும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ்களை மறித்தும், சிறை பிடித்தும் போராடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.