சண்டிகர்:ஒரு காளை மாட்டின் சாணிக்காக ஒரு குடும்பமே காத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி நிகழ்வு தான் அரியானா மாநிலத்தில் நடந்திருக்கிறது.

அரியானா மாநிலம் சிர்ஷா மாவட்டம், கலன்வாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜனக்ராஜ் என்பவர். உள்ளூர் வியாபாரி. அவர் தாம் அணிந்திருந்த விலை உயர்ந்த தங்க நகைகளை கழற்றி சமையல் அறையில் உள்ள டப்பாவில் வைத்திருந்திருக்கிறார்.

அதை அறியாத அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள், காய்கறி கழிவுகளை அதனுள் கொட்டி, வீட்டுக்கு வெளியே வீசி இருக்கின்றனர். வழக்கம் போல அங்கே சுற்ற திரிந்த மாடு ஒன்று, அந்த காய்கறி கழிவுகளை புசித்திருக்கிறது.

இந்த விஷயம் ஜனக்ராஜ் குடும்பத்தினருக்கு ஒரு சுவாரசியமான சம்பவம் மூலமே தெரிய வந்திருக்கிறது. அதாவது தங்க நகைகளில் சில வீட்டின் வெளியே கிடந்திருக்கிறது. நகைகள் காணாமல் போனது தெரிய வந்திருக்கிறது.

அதையடுத்து, ஜனக்ராஜ் குடும்பத்தினர் தீவிரமாக யோசிக்க தொடங்கினர். பின்னர் தமது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அப்போது தான் காய்கறி கழிவுகளுடன், நகைகளையும் மாடு, சாப்பிட்ட விஷயமே தெரிய வர, பரபரப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கின்றனர்.

அதன்பிறகு அந்த மாட்டை 5 மணி நேரம் தேடலுக்கு பிறகு கண்டுபிடித்து வீட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றனர். அந்த மாடு சாணி போட்டால் அதில் தமது நகைகள் கிடைக்குமா என்று நகையின் உரிமையாளர் ஜனக்ராஜ் காத்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் சாணி போடும்போதும் அவரும், அவரது குடும்பத்தினரும் சென்று பார்ப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இவ்வாறு செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வேறு வழி தெரியவில்லை என்று ஜனக்ராஜ் புலம்பி தள்ளி வருகிறார்.

இந்த விஷயம் அங்கே, இங்கே என்று பரவி டுவிட்டரிலும் பரவிவிட்டது. வழக்கம் போல உள்ளே புகுந்த நெட்டிசன்கள், ஆளாளுக்கு ஏக வசனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, லாலா லஜபதி ராய் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் ரவிந்திர் சர்மா கூறியிருப்பதாவது: முதலில் அந்த மாட்டை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் அது நகைகளை உண்டிருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.

ஒருவேளை தங்க நகைகளை அந்த மாடு சாப்பிட்டிருப்பது உறுதி படுத்தப்பட்டால், அறுவை சிகிச்சை மூலம் அவற்றை எடுத்து விடலாம். இது ஒரு கடினமான விஷயம் என்றாலும் சாணியின் வழியே நகைகள் வெளியேற வாய்ப்புகளே அதிகம் என்றார்.