டெல்லி: தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவக்கல்லூரிகளை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதில் மிக முக்கியமாக தமிழகத்துக்கு சாதகமான ஒன்றாக, 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: மருத்துவ வசதிகள் குறைந்த மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, நாடு முழுவதும் புதியதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அவற்றில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

மத்திய அமைச்சரின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியும் 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். அதில், மத்திய அரசு சார்பில் 195 கோடியும், மாநில அரசின் சார்பில் 130 கோடி ரூபாயும் அளிக்கப்படும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம், தமிழகத்துக்கு கூடுதலாக, 900 மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் கிடைக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது. அது தவிர, அதிகபட்ச மருத்துவ படிப்புக்கான இடங்கள் கொண்ட மாநிலம் என்ற பெயரும் கிடைக்கும்.