பகுதி 3:  ஏன் பிராமணன்?      –  த.நா.கோபாலன்

நான் நேசிக்கும் எழுத்தாளர் ஷோபா சக்தி, இத் தொடர் குறித்த முகநூல் பதிவொன்றில், ‘பிராமணன்’ என்ற சொல்லாடலின் பொருளென்ன? அந்தப் பொருள் வர்ணப் பகுப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டதா இல்லையா?  அது மற்றையவர்களிடமிருந்து வேறுபடுத்தி வர்ணத்தில் உயர்வாய் கட்டமைக்கும் மேல்கீழ் தன்மை அல்லவா?

பெரியார்

எனக் கேட்டிருக்கிறார்.

அவ்வாறு அழைப்பது சூத்திரர் பட்டத்தை ஏற்றுக் கொண்டு மற்ற பகுதியினர் தங்களை தாழ்த்திக் கொள்வதாகும்.

பிராமணர்கள் என்று சொல்வது பஞ்சமா பாதகம் என்பது பெரியாரின் கருத்து எனவும் ஷோபா சக்தி மேலும் கூறியிருக்கிறார்

அண்மையில் சுப.வீ-எஸ் வி சேகர் மோதலின்போது,  சுப வீ குறிப்பிட்டார்: “‘பிராமணன்’ என்னும் சொல்லின் அடிச்சொல் ‘பிரம்மம்’ என்பது. ‘பிரம்மனில் இருந்து வந்தவன்’ என்று பொருள் தருவது.

பிரம்மனையே ஏற்காத நாங்கள், எப்படி பிராமணன் என்று அழைப்போம்? பிரம்மனை ஏற்றுக் கொள்கிறவர்களும் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. அவர்கள் பிரம்மனில் இருந்து வந்தவர்க ளென்றால், மற்றவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

அதனால், எனக்கு ஒவ்வாத ‘பிராமணர்’ என்னும் சொல்லை நான் பயன்படுத்துவதில்லை. ‘பார்ப்பனர்’ என்றே பயன்படுத்துகிறேன். அது வசைச்சொல் அன்று….”

ஷோபா சக்தியின் பதிவிற்கு பிராமணர்களைச் சாடி பின்னூட்டங்கள். என் நிலைத்தகவலிலும் அப்படியே.

நான் இந்த சாடல், வசை பற்றி பின்னர்தான் பேசவிருக்கிறேன். இந்த இடத்தில் ஏன் இந்தச் சொல்லாடல் என்பதற்கு மட்டுமான விளக்கம்.

நான் தமிழறிஞனன்று. (எதிலே அறிஞன் என்று மட்டும் கேட்டுவிடவேண்டாம் !)

எனவே என் அவசர ஆய்வு வழியாக நான் சொல்லக்கூடியது –

அந்தணர்கள், பார்ப்பனர்கள் என்ற இரண்டு வகை சொல்லாடல் இருந்து வந்திருக்கிறது நீண்ட நெடுங்காலமாக.

வள்ளுவரும் அவருக்குப் பின் திருமூலரும், அறுதொழிலோர் என்று அந்தணர்களைக் குறிப்பிடுகின்றனர்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

(நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.)

திருமூலர்

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர், செந்தழல் ஓம்பி
முப்போதும் நியமம் செய்து, அந்தவ நற்கருமத்து நின்று
ஆங்கிட்டுச், சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே”

என்கிறார்.

(வேதம் பயில்வது, பயிற்றுவிப்பது,  சுயமாக வேள்வி செய்வது,  மற்றவருக்கு வேள்வி செய்விப்பது,  தானம் கொடுப்பது, தான் தானம் பெறுவது என ஆறு வகை கடமைகள் அவர்களுக்கு.)

சங்ககாலத்துக் கவிஞர் கபிலர் தன்னை அந்தணன் என அறிமுகப்படுத்திக்கொள்கிறார். இன்னொரு புலவர் புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்” என்று கபிலரைக் குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவரே அந்தணன் என்பவன் அறவோன் என்கிறார். அந்தணன் என்று கூட  நான் சொல்லி யிருக்கலாம். ஆனால் அச் சொல் சற்று பிரமிப்பை அல்லது கூடுதல் மரியாதையை சுட்டக்கூடும் என்பதால் தவிர்த்துவிட்டேன்.

(அந்தணன் வேறு, பார்ப்பனன் வேறு என்றும் வாதிடப்படுகிறது. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.)

மேலும் வேதமறிந்தவர்கள் அவர்கள் என்று நம்பப்பட்டதால் வேதியர் என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் இப்போது முறையாக வேதங்களைக் கற்றறிந்தவர்கள் சிலரே என்பதால் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் அது பொருந்தாது.

பார்ப்பனர் என்பதற்கு ஒரு விளக்கம் – பார்ப்பு, பறவையின் குஞ்சை ஒத்த, அதாவது எப்படி முட்டை முதல் பிறப்பாகவும், அதிலிருந்து குஞ்சு வெளிவருவது இரண்டாவது பிறப்பாகவும் கருதப்பட லாமோ அது போல தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும்போது முதல்முறையும், அடுத்து பூணூல் அணிவிக்கப்படும்போதும், இவ்வாறு பிராமணர்கள் இரண்டு முறை பிறக்கின்றனர்,  அவர்கள் த்விஜர்கள், இரு பிறப்பாளர்கள்.

சுப வீயோ தொழில் அடிப்படையில் குறி பார்ப்பார், கணி (ஜோதிடம்) பார்ப்பார் என்கிற அடிப்படையில் அவர்கள் பார்ப்பார், பார்ப்பனர் என்று அழைக்கப்பட்டனர் என்கிறார்.

பார்ப்பார் எப்படிப் பார்ப்பனராகும்?

எப்படியும் தொல்காப்பியத்திலிருந்து சிலப்பதிகாரம் வழியாக பாரதி வரை பார்ப்பனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சரி, இதில் எங்கே பிராமணர்கள்? சமஸ்கிருதச் சொல்லான பிராமண: என்பதற்கு பிரம்மத்தை, இறையை அறிந்தவன் என்ற பொருள். ஆங்கிலத்திலும் Brahminக்கு வேர்ச்சொல்லும் சமஸ்கிருதம்தான்.

அந்தணர் என்ற சொல் அன்றாட உரையாடல்களில் அதிகம் புழக்கத்திலில்லை. பார்ப்பான் என்ற சொல்லையோ மற்ற சாதியினர் தங்களை கேவலப்படுத்தும் வகையில் சுட்டிவருகின்றனர் என்று நினைத்து பிராமணர்கள் என்ற சொல்லுக்கு படித்த சமூகம் தாவியிருக்கலாம். எப்போதிலிருந்து? அது குறித்த சான்றுகள் இல்லை.

அதே நேரம் இத்தகைய வாதத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. திருமூலரே பிராமணர் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.

“சத்தியம் இன்றித்
தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும்
உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப்
பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர்
பிராமணர் தாம்அன்றே.

(முதல் தந்திரம் – 15. அந்தணர் ஒழுக்கம்)

ஆனாலும் வேறு பழந்தமிழிலக்கியங்களில் பிராமணன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திருமந்திரத்தில் இது இடைச் செருகல் என்று கருதவும் இடமிருக்கிறது.

காலனீய ஆட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த அச்சாதியினரைக் குறிக்கும் சொல்  பிராமணர்கள்தானே. அப்போது நீ பிராமணனில்லை, பார்ப்பான் தான். உன்னை பார்ப்பானென்று சொன்னால் எனக்கிழிவு என பெரியார் முழங்கினாரென்றால், அதற்குக் காரணம் அவர்கள் குறித்த பிம்பத்தினைத் தகர்ப்பதுதான்.

இன்றைய நிலையில் அவர்கள் அதிகாரங்களை இழந்து, மகிமைகளையும் இழந்துவிட்ட நிலையில், அவர்களை தூற்றவேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

எந்த ஒரு சமூகமும் தங்களை இழிவுபடுத்தும் சொல்லாக ஒன்றைக் கருதுகிறதோ அதைப் பயன்படுத்துதல் தவறு மட்டுமின்றி அதன்மீது குரோதமிருப்பதாகவும் ஆகும்.

பார்ப்பனீய சிந்தனையை கடுமையாக எதிர்க்கவேண்டுமென்பது வேறு, அச் சமூகத்தில் பிறந்ததாலேயே நீ இழிபிறவி என்பது வேறு. எனவேயே அச் சொல்லை நான் பயன்படுத்த மறுக்கிறேன்.

இத்துடன் இந்த விவாதத்தை முடித்துவிட்டு பிராமணர்களின் சமூக பொருளாதார சூழல் பற்றிக் காண்போம்.

(தொடரும்)