டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் 3 மாதங்களுக்கு பிறகே போட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வருவதால், தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே   18 வயது மேற்பட்டவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதுரு, 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும்  பணி நடைபெற்று வருகிறது.

அதுபோல, முன்களப் பணியாளர்கள்,  60 வயதுக்கு மேற்பட்டோளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  2வது தவணை தடுப்பூசி போட்டவர்கள் 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்போது எழுதி உள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் மூன்று மாதங்களுக்கு பிறகே போட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளுமாறும், அறிவியல் சான்றுகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.