உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்தி, தாய் மொழியாக இருந்தாலும், ‘பாலிவுட்’ எனப்படும் இந்தி சினிமா உலகம் மும்பையை தளமாக கொண்டே செயல்படுகிறது.

இந்தி சினிமாக்களின் ஷுட்டிங் மும்பையில் தான் நடக்கிறது. இந்தி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்களின் இல்லம் மும்பையில் தான் உள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் சர்வதேச வசதிகளுடன் கூடிய சினிமா நகரை உருவாக்கப்போவதாக அண்மையில் தெரிவித்த, அந்த மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத் நேற்று மும்பையில் இந்தி சினிமா உலக ஜாம்பவான்கள் அக்‌ஷய் குமார், சுபாஷ் கை, போனிகபூர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, உத்தரபிரதேச அரசாங்கம், டெல்லி அருகே அமைக்கும் பிலிம் சிட்டிக்கு, மும்பையில் செயல்படும் இந்தி சினிமா உலகை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக மகாராஷ்டிராவில் உள்ள கட்சிகள் குற்றம் சாட்டின.

“மும்பையில் மட்டுமா சினிமா ஷுட்டிங் நடக்கிறது ? தெற்கு மாநிலங்களில் ஏராளமான படப்பிடிப்பு நடக்கிறது. பஞ்சாப், மே.வங்காளத்தில் நடக்கிறது. அங்கு போகாமல் யோகி ஏன் மும்பை வர வேண்டும்?” என சிவசேனா கட்சி வினா எழுப்பியது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மும்பையில் பேட்டி அளித்த யோகி ஆதித்ய நாத் “இந்தி சினிமா உலகம் மும்பையில் தான் இருக்கும்.அதை யாரும் தூக்கி கொண்டு போக முடியாது” என்று காட்டமாக தெரிவித்தார்.

“பறித்து செல்வதற்கு, இந்தி சினிமா உலகம் சட்டைப்பையில் வைத்திருக்கும் ‘பர்சா’ என்ன ? நாங்கள் உலகத்தரத்தில் டெல்லி அருகே பிலிம் சிட்டி கட்டுகிறோம். அங்கே வருமாறு யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை” என யோகி மேலும் கூறினார்.

– பா. பாரதி