மும்பை

யில் டிக்கட் பரிசோதகர்கள் உடலில் கண்காணிப்பு படக்கருவி பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Sample pic

அண்மையில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. .அடிக்கடி பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இப்படிப் புகார்கள் வரும்போது, அவை குறித்து உண்மைத்தன்மை அறிவதற்காக, டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் படக்கருவி பொருத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக, மத்திய ரெயில்வேயில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி 50 ‘பாடி கேமரா’ க்கள் வாங்கி, மும்பை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதன் வெற்றியைப் பொறுத்து, நாடு முழுவதும் டிக்கெட் பரிசோதகர்களுக்குப் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படக்கருவியின் விலை ரூ.9 ஆயிரம் ஆகும். அதில், 20 மணி நேரத்துக்கு நிகழ்வுகளைப் பதிவு செய்ய முடியும்.

நேற்று ரயில்வே செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம்,

”இந்த கேமிரா பதிவின் மூலம் ஏதேனும் ஒரு புகார் வந்தால், யார் மீது தவறு என்று வீடியோ காட்சியைப் போட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.  இதனால், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும்,  யாருக்கும் தேவையின்றி பெயர் கெட்டுப்போவது தவிர்க்கப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.