லூதியானா

தாம் ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கூட தம்மை தூக்கிலிடலாம் எனப் பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்

டில்லியில் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குகள் பதிந்துள்ளன.  இந்த வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு பதவியை இழந்துள்ளார்.  அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 16 ஆம் தேதி அன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.  நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி மருத்துவ விடுதி திறப்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில், “சி.பி.ஐ., அமலாக்கத்துறை என எல்லாவற்றையும் என் மீது ஏவி விடுகிறார்கள்.  அவர்களது நோக்கம் எப்படியாவது, ‘கெஜ்ரிவால் ஒரு திருடன், அவனும் ஊழலில் ஈடுபட்டுள்ளான்’ என்று நிரூபிக்க வேண்டும் என்பதாகும்.

பிரதமர் மோடிக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்.  என் மீது ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கூட என்னைப் பகிரங்கமாகத் தூக்கிலிடுங்கள்.” என்று சவால் விடுத்துள்ளார்.