சென்னை: பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கி, அதற்கான சாவியை அந்த குழந்தையின் பெற்றோரிடம்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். அமைச்சரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பிளிச்சிங் பவுடர் சாப்பிட்டதால் உடல் மெலிந்து, உயிருக்கு போராடிய நெல்லை அருகே  தென்காசி பகுதியை சேர்ந்த குழந்தை குறித்து தகவல் அறந்த தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமயியன், அந்த குழந்தைக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் கேசிரோடு கூலி தொழிலாளர்களின் குழந்தை  இசக்கியம்மாள் என்ற 5வயது சிறுமி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு சுத்தம் செய்ய வைத்திருந்த பிளீச்சிங் பவுடரை தின்பண்டம் என நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அந்த  சிறுமி உணவு மற்றும் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் வலியால் துடித்துள்ளார். இதனால், அந்த குழந்தையின் உடல் பாதிக்கப்பட்டது.

குழந்தை இசக்கியம்மாளை அவர்களது பெற்றோர்  தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி ஓரளவு குணமடைந்ததாக கூறி கடந்த மாதம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், குழந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. அவரால் சரியான முறையில் சாப்பிட முடியாததுடன், எடை குறைந்து உடம்பு மெலிந்து வந்ததால் அருகில் உள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தனது குழந்தையின் உடல்நிலை குறித்து தமிழகஅரசுக்கு தெரிவித்ததுடன், தனது குழந்தையை காப்பாற்றி தரும்படி கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுவின் அறிவுரையின் பேரில்,  தென்காசி அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இசக்கியம்மாளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இன்று அமைச்சர் மா.சு. திடீரென எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையை பார்வையிட்டார். அப்போது மருத்துவர்களின் குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

தற்போது தென்காசி குழந்தையின் எடை கூடியுள்ளது. இங்கு சிகிச்சைக்கு வரும் 6 கிலோவாக இருந்த குழந்தையின் உடல் எடை தற்போது  8 கிலோவாக உயர்ந்துள்ளது. குழந்தை இன்னும் சில காலம்  சிகிச்சையில் இருக்க வேண்டியது உள்ளது. அதனால், ஏழை எளிய குடும்பமான அந்த குழந்தையின் பெற்றோர்கள் சென்னையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அவர்கள்  சென்னையில் வெளியில் தங்க வசதி இல்லாததால் சேப்பாக்கத்தில் உள்ள அரசு சட்டமன்ற விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. .அதற்கான சாவியை அந்த குழந்தையின் பெற்றோரிடம்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்துள்ளார்.  அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியனின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.