விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை அறைந்ததோடு, அவரை நோக்கி செருப்பை வீசிய பா.ஜ.க. பெண் நிர்வாகியால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த ஒன்றாம் தேதி கன்னியாகுமரியிலிருந்து விழிப்புஉணர்வு பிரசார நடைபயண பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந் நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்த அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலிருந்து பிரசாரத்தை  ஆரம்பித்து,  கிராமங்கள் வழியாக திருச்செந்தூர் வந்தார்கள்.

திருச்செந்தூரில், ரதவீதிகளில் விழிப்புஉணர்வு பிரசாரத்தை முடித்த பின், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய  அய்யாக்கண்னு மற்றும் விவசாயிகள் வந்தனர். அங்கு     பக்தர்களிடம் விழிப்புஉணர்வு நோட்டீஸை விநியோகம் செய்தனர்.

 

 

இந்த நிலையில் அங்கு ஆவேசத்துடன் வந்தார் பா.ஜ.க. மகளிரணி மாவட்டச் செயலாளர் நெல்லையம்மாள்.  அவர், ”பக்தர்களுக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்கக் கூடாது’ என அய்யாக்கண்ணுவிடம் கூறினார். இதையடுத்து அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திடீரென நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதோடு அய்யாக்கண்ணுவை நோக்கி செருப்பை வீசினார்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நெல்லையம்மாளை நோக்கி அடிப்பது போல செல்லவே அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

பிறகு பக்தர்கள் இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். பிறகு தொடர்ந்து அய்யாக்கண்ணு தரப்பினர் நோட்டீஸ் விநியோகித்தனர்.