சகரான்பூர்:

உ.பி. மாநிலம் சகரான்பூர் மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி மத கலவரம் நடந்தது. இந்த கலவரத்தை தூண்டியதாக பாஜ எம்பி ராகவ் லக்கன்பால் உள்பட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய அந்த மாவட்ட எஸ்பி லவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கலவரத்தின் போது எஸ்பி அலுவலகம், வீடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டது. லக்கன்பால் மற்றும் உள்ளூர் பாஜ பிரமுகர் பலர் அம்பேத்கர் யாத்திரையை மத பதற்றம் நிறைந்த பகுதி வழியாக கொண்டு சென்றனர். காவல்துறை மறுப்பையும் மீறி இந்த யாத்திரையை பாஜகவினர் நடத்தினர்.

கடந்த 7 ஆண்டுகளாக சதாக் துத்லி என்ற இந்த கிராமத்தில் எவ்வித பேரணி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படுவது கிடையாது. முஸ்லிம் மற்றும் தலித்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். தற்போது உ.பி.யில் பாஜ ஆட்சி அமைந்துள்ளதால் இந்துத்வா அமைப்புடன் பாஜகவினர் கைகோர்த்துக் கொண்டு இந்த யாத்திரை நடத்துவது குறித்து அறிவிப்பை வெளியிட்டனர்.

மேலும், இந்த ஆண்டு குறிப்பிட்ட இந்த கிராமத்தின் வழியாக யாத்திரை நடக்கும் என்று தெரிவித்தனர். முஸ்லிம்கள் நிறைந்த பகுதிக்குள் யாத்திரை செல்ல முயன்ற போது போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜ ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

எஸ்பி வீட்டை தாக்கினர். மேலும் வன்முறை கும்பல் சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்தனர். பொது சொத்துகளுக்கு தீ வைத்து எரித்தனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ‘‘சரான்பூரை காஷ்மீராக மாற விடமாட்டோம்’’ என்று எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.