கொல்கத்தா:

மேற்கு வங்க மாநில கிராமப் புற தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் மாவோயிஸ்ட் ஆதரவு பெற்ற ஆதிவாசி சமான்வாய் மஞ்ச் (ஏஎஸ்எம்) என்ற அமைப்புடன் பாஜக கைகோர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்தது. பழங்குடி இன மக்களின் ஆதிக்கம் நிறைந்த ஜார்கிராம் மற்றும் புருலியா மாவட்டங்களில் இத்தகைய நிலைப்பாட்டை பாஜக கையில் எடுத்தது.

இந்த கைகோர்ப்பு எதிர்பார்த்ததை விட பாஜக.வுக்கு சிறந்த முறையில் கை கொடுத்துள்ளது. இந்த அமைப்பின் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படி மாவோயிஸ்ட்கள் கேட்டுக் கொண்டதை உளவுத் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இந்த பகுதிகளை உள்ளடக்கிய 3 கிராம பஞ்சாயத்துக்களை திரிணமுல் காங்கிரஸ் இழந்துள்ளது. இதற்கு பாஜக&ஏஎஸ்எம் இடையே ஏற்பட்ட சீட் ஒதுக்கீடு ஒப்பந்தம் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

‘‘ஏஎஸ்எம் வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. நாங்கள் இருவருமே திரிணமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்ககிறோம். அதனால் எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. எதிர்காலத்திலும் இது தொடரும். கடந்த தேர்தல்களில் ஏஎஸ்எம் ஆதரவுடன் தான் திரிணமுல் காங்கிரஸ் இந்த பகுதிகளில் வெற்றி பெற்றது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புடன் பாஜக கைகோர்த்து செயல்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘அவர்கள் மாவோயிஸ்டகளோடு கைகோர்ப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் பாஜக இத்தகைய முடிவை எடுத்தது அதிர்ச்சியளிக்கிறது. ஜார்கண்ட் மற்றும் பங்களாதேஷில் இருந்து சமூக விரோதிகளை மேற்கு வங்கத்திற்கு அழைத்து வந்து அமைதியை கெடுக்க முயற்சி நடக்கிறது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.