பாஜகவுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகள் : மம்தா பானர்ஜி

Must read

கொல்கத்தா

பாஜகவிற்கு எதிராகக் கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

பாஜகவுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு தான் நிலவி வந்தது. குறிப்பாகத் தேர்தல் பிரசாரத்தின்போது இரு தரப்பிற்கும் கடும் மோதல் நிலை நிலவி வந்தது.  பாஜக மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தொடங்கிய அமித்ஷா, ராஜ்நாத்சிங் எனப் பல முக்கிய தலைவர்கள் அங்குத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர்.

இவ்வளவு பிரசாரம் செய்தும் பாஜகவால் அங்கு மூன்று இலக்கில்கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    ஆயினும் தேர்தல் முடிந்தும் பாஜக மற்றும் மம்தா பானர்ஜி இடையே மோதல் குறையாமல் உள்ளது.  சமீபத்தில் பிரதமர் மோடி நடத்திய புயல் நிவாரணக் கூட்டத்துக்கு வந்த மம்தா உடனடியாக கிளம்பியதும் அதை ஒட்டி மேற்கு வங்க தலைமைச் செயலர் மாற்றம் நிகழ்ந்ததும் அனைவரும் அறிந்ததே.

இன்று காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் ஒன்றைப் பிரதமர் மோடி டில்லியில் நடத்தி உள்ளார்;  இந்த கூட்டம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்;  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், “அவர்கள் ஏன் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை நீக்கினார்கள் என்றே எனக்கு புரியவில்லை. மத்திய அரசால்  அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயலால் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயர் களங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  ஆனால் இந்த கோரிக்கையை விடுக்கும் விவசாயிகள் மத்திய அரசால் தேசத் துரோகிகள் போல் நடத்தப்படுகின்றனர்.  பாஜகவுக்கு எதிராகக் கேள்வி கேட்கும் அனைவரும் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article