பாட்னா

ராமர் குறித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பீகார் அமைச்சர் சந்திரசேகர் பேசியது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. 

 

தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி பீகார் மாநிலத்தில் நடந்து வருகிறது.  இந்தக் கட்சி ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளது. பீகார் மாநில அமைச்சரவையில் கல்வி அமைச்சராக சந்திரசேகர் பதவி வகித்து வருகிறார்.

அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது,

”எனது கனவில் கடவுள் ராமர் தோன்றினார். என்னிடம் பேசும்போது, மக்கள் என்னை மோசம் செய்கின்றனர். சந்தையில் என்னை விற்கின்றனர்.  அவர்கள் என்னை விற்பதில் இருந்து காக்க வேண்டும். அது இந்த பூமிக்குப் பெரிய பலனளிக்கும் எனக் கூறினார்” 

சாதி முறைக்குக் கடவுள் ராமர் எதிராக இருந்தவர் ஆவார்.  நாம் ராம்ஜி விரும்பிய வழியில் நாட்டை உருவாக்குவோம்.  அதற்குப் பிறகு அமெரிக்காவை எப்படி நாம் பின்னுக்குத் தள்ளுவோம் எனப் பார்ப்போம்” 

என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு பீகார் மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 14 ஆம் தேதி அன்று அமைச்சர் சந்திரசேகர்,

”நான் 56 வகையான உணவு வகைகளை செய்து அவற்றில் பொட்டாசியம் சயனைடை கலந்து விட்டால், நீங்கள் உண்ண முடியுமா? இது போன்ற விஷயம் தான் இந்துத்துவத்தின் புனித நூல்களிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளன” 

 எனப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.