ருத்ராட்சத்தின் பலன்கள் என்னென்ன?

ருத்ராட்சம் என்பது மிகவும் புனிதமான பொருளாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் அலங்காரப் பொருளாக இருக்கும் ருத்திராட்சத்தினையே சிவபக்தர்கள் கடவுளாகப் பாவித்தார்கள். சிவனின் கண்ணாகவும் ருத்ராட்சம் பார்க்கப்படுகிறது. சிவபெருமானின் உடல் முழுவதிலும் இருக்கும் இந்த ருத்ராட்சத்திற்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் என்ன பலன்? அவற்றினால் நம் உடல் மற்றும் மனதில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகின்றன? என்பதைப் பற்றித்தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ருத்ராட்சத்தை ஒருவர் அணிந்து கொள்வதால் அவர்களின் மனதில் எப்போதும் சிவ சிந்தனை எழுந்துகொண்டே இருக்கும். மற்றவர் உங்களைப் பார்க்கும் பாதிக்கக்கூடிய பார்வையை, உங்களிடமிருந்து விலக்கி வைக்கிறது. உங்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அழித்து, உங்களிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது பார்த்துக்கொள்கிறது.  ருத்ராட்சம் அணிந்து இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்தையும், செயலையும் ஆழ்ந்து, சிந்தித்து பின்னரே செயல்படுவார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் மிகவும் துரிதமாகவும், தெளிவாகவும் இருக்கும். எந்த ஒரு வேண்டாத பழக்கமும், தீய பழக்கமும் அவர்களை விட்டுத் தானாகவே விலகிவிடும்.

உண்மையான ருத்ராட்சம்:

இப்பொழுதெல்லாம் ருத்ராட்சத்தில் பலவித போலிகள் வருகின்றன. உன்னதமான ருத்ராட்சத்தை அதனை நீங்கள் அணிந்திருந்தால் தானாகவே உங்களுக்கு, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உண்டாகும். மற்றவர்களுக்குத் தீமை செய்யும் தீய குணங்கள் அழிந்து, நல்ல எண்ணங்கள் மட்டுமே மனதிற்குள் இருக்கும். உன்னதமான ருத்ராட்சத்தை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது இவற்றை உங்களால் நிச்சயம் உணர முடியும். அவ்வாறு இல்லாமல் தீய எண்ணங்கள் உங்களிடம் வரத் தொடங்கினால் நீங்கள் போட்டிருக்கும் ருத்ராட்சம் போலியானது எனத் தெரிந்து கொள்ளலாம்.  ருத்ராட்சத்தை அணிந்து இருப்பவர்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வரக்கூடிய துன்பங்களை முன்னரே அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

ருத்ராட்சம் யார் யாரெல்லாம் அணியக் கூடாது:

நாம் தீட்டு என்று சொல்லக்கூடிய சுடுகாட்டில் தான் சிவபெருமான் வசிக்கிறார். எனவே இதற்கு எவ்வித தீட்டு சம்பந்தமான சூழ்நிலையும் கிடையாது. பலருக்கும் திருமணமானவர்கள் இதனை அணியலாமா? என்ற கேள்வி மனதில் எழுவதுண்டு. சிவபெருமானே சிவனும் சக்தியும் சேர்ந்த கலவையாகவே இருக்கிறார். ஆகவே திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் எவர் வேண்டுமானாலும் இதனை அணிந்து கொள்ளலாம். அதேபோல் எவ்வித பேதமும் இல்லாதவர் சிவபெருமான். எனவே ஆண், பெண், திருநங்கை என அனைவருமே ருத்ராட்சத்தினை அணிந்து கொள்ளலாம்.

மோட்சம் தரும் ருத்ராட்சம்:

மூன்று அம்ச ருத்ராட்சம் எப்போதும் எல்லாவித அறிவாற்றலையும் கொண்டிருக்கும். நான்கு முகங்கள் கொண்ட ருத்ராட்சம் பிரம்மனின் வடிவமாகும். தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் இவையே இதன் தத்துவமாகும். ஐந்து முகங்கள் கொண்ட ருத்ராட்சம் கால காணி ருத்ராட்சத்தின் வடிவமாகும். இதனை அணிந்து இருப்பவர்கள் நேரடியாக மோட்சத்திற்குச் செல்லும் பலனை அடைவார்கள். ஆறுமுக ருத்திராட்சம் கார்த்திகேயன் வடிவம். இதனை அணிபவர்கள் பாவத்திலிருந்து விடுபடுவார்கள். ஏழு முக ருத்ராட்சத்தினை அணிபவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் குபேரனாக மாறுவார்கள். 8 முக ருத்ராட்சம் மனிதனுக்கு நிறைவான வாழ்வைத் தருகிறது. ஒன்பது முக ருத்ராட்சம் தமிழ் மொழியின் வடிவமாகும். பத்து முக ருத்ராட்சம் விஷ்ணு பகவானின் அம்சமாகும்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த ருத்ராட்சத்தை எப்போதும் நம் உடலில் அணிந்து கொள்வதால் உங்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் விலகி உங்களுக்கான நல்ல பலன்கள் கிடைத்திடும்.