மும்பை
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் ஆகாதி கட்சி (விபிஏ) பல இடங்களில் மூன்றாவதாக வந்துள்ளது.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – சிவசேனா மற்றும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரஸ் கூட்டணியில் பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் ஆகாதி (விபிஎ) கட்சி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்துக் களம் இறங்கியது.
தற்போது இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விபிஎ கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆயினும் இந்த தேர்தலில் பல தொகுதிகளில் விபிஎ வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
குறிப்பாக பாஜக மற்றும் சிவசேனா வெற்றி பெற்றுள்ள தொகுதிகளில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கும் இக்கட்சிக்கும் இடையில் உள்ள வாக்கு வித்தியாசத்தை விட விபிஎ கட்சி அதிக வாக்குகள் பெற்றுள்ளன. எனவே இந்த தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியுடன் விபிஎ கட்சி இணைந்திருந்தால் முடிவுகளில் நிச்சயமாக மாற்றம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது 161 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக கூட்டணி, மேலே குறிப்பிட்டுள்ள 25 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியில் விபிஎ இடம் பெற்றிருந்தால் தோல்வி அடைந்திருக்கும் அதாவது அப்போது பாஜக கூட்டணியில் 136 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும். அத்துடன் காங்கிரஸ் கூட்டணிக்கு அந்த தொகுதிகளில் வெற்றி கிட்டி மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 127 ஆகி இருக்கும்.
அப்படி இருந்தால் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிட்டி இருக்கும். ஆனால் இந்தக் கூட்டணியில் விபிஎ கட்சி இடம் பெறாத காரணத்தால் பாஜக வெற்றி பெற்று அரசு அமைக்க உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.