சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்கள் குறித்து ஆளுநருக்கு சமர்ப்பிக்க தயாராக இருங்கள் என அனைத்து  துறைச்செயலர்களுக்கு தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்ற சில நாட்களில் தமிழக ஆளுநரும் மாற்றப்பட்டார். புதிய ஆளுநராக ஆர்என்.ரவி நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அதுபோல நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த மாத தொடக்கத்தில், ஆளுநர் ஆர். என். ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது மாநில அரசு குறித்து சில தகவல்களை கூறியதாக தகவல்கள் பரவின. அதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்த சட்டம் ஒழுங்கு குறித்தும், நீட் தேர்வு குறித்து பேசினார். தொடர்ந்து, தமிழகத்தில் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் கடந்த வாரம் இறுதியில் ஆளுநர் திடீரென டெல்லி சென்று பிரதமர் உள்பட பல அமைச்சர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகம் திரும்பிய நிலையில்,  தமிழக தலைமை செயலாளர் இறையன்புவிடம், தமிழகத்தில் நடைபெற்று வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.‘

இதைத்தொடர்ந்து, அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச்செயலாளர் இறையன்பு சுற்றறிக்கைஅனுப்பி உள்ளதாகவும், அதில், ‘திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயின்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும்’ என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலாளர் இறையன்புவின் சுற்றறிக்கை  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.