சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் காற்றுடன் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதற்கு ரெமல் புயல் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. இதனால்,   மே 26-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  , ” தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிவிட்டது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது.. இது தீவிர புயலாக மாறும். இந்த தீவிர புயலுக்கு ‘ரெமல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட்  கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையும் ஆரம்பமாகி உள்ளது,

இந்த ரெமல் புயல்  மே 26-ம் தேதி வங்கதேசத்தை கடக்கும். எனவே, வரும் 26- ம் தேதி வரை மீனவர்கள் சம்பந்தப்பட்ட கடலுக்குச் செல்ல வேண்டாம்.  அதாவது, இந்த புயல்  வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 25-ம் தேதி மாலை நிலவும். இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மே 26-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அது போல் மக்களும் நீர் வீழ்ச்சி, மலைப்பிரதேசங்கள் கொண்ட இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

இந்த புயல் காரணமாக, மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும், மேலும்,  குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மே 25-ம் தேதி வரை அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்” என்று வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதனப்டி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றான் எண் புயல் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.