சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிகாரவர்க்கதுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் பழங்குடி மக்களின் பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதனால் பல இன்னல்களுக்கு ஆளான பெண் பத்திரிக்கையாளர் மாலினி சுப்ரமணியத்துக்கு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழு சார்பில் இண்டர்நேஷனல் ப்ரஸ் ஃப்ரீடம் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

malini_subramaniyam

சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டர் பகுதியில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் அரசு மற்றும் மாவோயிஸ்ட் இரு தரப்பின் கோபத்துக்கும் ஆளான மாலினி சுப்ரமணியம் போலீசாராலும் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளாலும் அடைந்த துன்பங்களுக்கும் அளவில்லை. ஆனாலும் மனம் தளராமல் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காக தொடர்ந்து போராடி வந்தார். ஒருகட்டத்தில் அம்மாநில அரசே அவரை சட்டீஸ்கரை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
இந்நிலையில், மாலினி சுப்ரமணியத்துக்கு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழு சார்பில் இண்டர்நேஷனல் ப்ரஸ் ஃப்ரீடம் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[embedyt] http://www.youtube.com/watch?v=RP0QWHVmWRg[/embedyt]
மாலினி சுப்ரமணியம் பற்றிய காணொளி

இந்தியா, எகிப்து, துருக்கி மற்றும் எல் சால்வடார் ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 4 பத்திரிக்கையாளர்களுக்கு, தங்கள் பணியின் நிமித்தம் அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலினி ஸ்க்ரோல்.இன் என்ற ஆன்லைன் பத்திரிக்கைக்கு அதிகமாக கட்டுரைகளை எழுதிவந்தார். தற்பொழுது தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசிக்கும் அவர் மீண்டும் சாட்டீஸ்கர் சென்று அந்த பழங்குடி மக்களுடன் தங்கி அவர்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களுக்கு உதவ ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.