உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸ் அவுட்டான முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

இலங்கை அணியின் ஸ்கோர் 135 ஆக இருக்கும் போது நான்காவது விக்கெட்டுக்கு அசலங்கா உடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த சமரவிக்ரம 24.2 வது ஓவரில் அவுட்டானார்.

இதனைத் தொடர்ந்து விளையாட வந்த அஞ்செலோ மாத்தியூஸ் பிட்சுக்கு வந்த பின் தனது ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியாக பொருந்தாததை அடுத்து மாற்று ஹெல்மெட் எடுத்துவர சைகை செய்தார்.

கிரீஸை விட்டு வெளியேறி மாற்று ஹெல்மெட் வாங்கி வந்த அஞ்செலோ மாத்தியூஸ் ஒரு பந்தை கூட சந்திக்காத நிலையில் திடீரென அவுட் என்று அறிவிக்கப்பட்டார்.

இதனால் சற்று குழம்பிப் போன அஞ்செலோ மாத்தியூஸிடம் அவுட்டான வீரருக்கு மாற்று வீரர் 2 நிமிடங்களுக்குள் கிரீஸுக்கு வரவேண்டும் என்ற விதியின் கீழ் அவுட் வழங்கப்பட்டதாக நடுவர் அவருக்கு விளக்கம் அளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத மாத்தியூஸ் வேதனையுடன் பெவிலியன் திரும்பினார்.

பங்களாதேஷ் அணியின் கேப்டன் மற்றும் பந்துவீச்சாளர் இருவரும் அஞ்செலோ மாத்தியூஸ் கூடுதல் நேரம் எடுப்பதால் அவுட் வழங்கவேண்டும் என்று நடுவரிடம் முறையிட்டதை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

சர்வதேச போட்டி ஒன்றில் முதல்முறையாக டைம்டு அவுட் முறையில் பேட்ஸ்மேன் ஒருவர் வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாத்தியூஸ் அவுட்டானது மிகவும் அநியாயமானது என்று குமுறும் நெட்டிசன்கள் 1987 ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் கோர்ட்னி வால்ஸ் வெளிப்படுத்திய ஸ்போர்ட்ஸ்மான்ஷிப் குறித்து பதிவிட்டு பங்களாதேஷ் வீரர்களை கலாய்த்து வருகின்றனர்.