பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஹோட்டல் பில்லில் 40 பைசா அதிகமாக வசூலித்ததாக புகாரளிக்கப்பட்டது.

2021 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி சென்ட்ரல் தெருவில் உள்ள ஹோட்டல் எம்பயருக்குச் சென்ற மூர்த்தி என்பவர் அங்கு உணவு ஆர்டர் செய்தார், மொத்தம் ரூ. 264.60 ஆன நிலையில் அதை ரூ. 265 என்று முழுமையாக்கி வசூலித்துள்ளனர்.

இது குறித்து ஆட்சேபம் தெரிவித்த மூர்த்திக்கு 40 பைசா எதற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்டது என்பதற்கு உரிய விளக்கம் கிடைக்காததால், நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியதோடு இந்த வழக்கை விசாரித்து தனக்கு ஒரு ரூபாய் இழப்பீடு பெற்று தருமாறு கோரிக்கை வைத்தார்.

எட்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. “50 பைசாவுக்கு கீழ் வரும் தொகையை வியாபார நிறுவனங்கள் விட்டுக்கொடுக்கவும் 50 பைசாவுக்கு மேல் வரும் தொகையை அதன் அடுத்த முழு இலக்க தொகைக்கு மாற்றியமைக்கவும் அரசு தனது விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது.

இதனை கவனத்தில் கொள்ளாமல் மனுதாரர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ. 2000 அபராதமும், ஹோட்டல் நிர்வாகத்தினரின் செலவினங்களுக்காக ரூ. 2000 என மொத்தம் 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்துள்ளது.

40 பைசா அதிகம் வசூலித்த ஹோட்டல் மீது வழக்கு தொடுத்த நபர் தனது பெயர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி தற்போது 4000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பரபரப்பாக பேசப்படுகிறது.