வாழை விவசாயிகளுக்கு வாழ்வு..  பத்திரிகையாளரின் யோசனையை ஏற்ற மகேந்திரா..


நாட்டின் முன்னணி நிறுவனமான மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திராவுக்கு ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் பத்மநாபன் என்பவர் ஒரு ஈ மெயில் அனுப்பினார்.

அதில் உங்கள் நிறுவனத்தின் கேன்டீன்களில் தட்டுகளுக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்தலாமே என்று யோசனை தெரிவித்திருக்கிறார்.

கொரோனா நெருக்கடியால் வாழை விவசாயிகள் தாங்கள் வேளாண் பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் வாழை இலைகளைப் பெருமளவில் கொள்முதல் செய்தால் அவர்களின் துயரங்கள் போக்குவதில் உங்கள் பங்கு கணிசமாக இருக்கலாம் என்று என்று அந்த பத்திரிக்கையாளர் யோசனை தெரிவித்திருக்கிறார்.


இந்த கருத்து ஆனந்த் மகேந்திராவுக்கு உடனடியாக பிடித்துவிட்டது. தனது நிறுவனங்களின் கேன்டீன்களில் ஸ்டில் தட்டுகளுக்குப் பதிலாக வாழை இலை கொண்டு உணவு பரிமாறும் படி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தற்போது அங்கு வாழை இலைகளில் உணவு பரிமாறப்படுகிறது..இந்த விவரங்களைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் வெளியிட்டுள்ளார் ஆனந்த் மகேந்திரா.

இதையடுத்து அவருக்குச் சமுக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் தொற்று பரவாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் வாழையிலை சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்தது என்பதுடன்.. கோடைக்காலம் என்பதால் சாப்பாட்டுத் தட்டுகளைச் சுத்தம் செய்யத் தேவைப் படும் தண்ணீர் பெருமளவு மிச்சமாகும் என்றும் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

-லட்சுமி பிரியா