புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 4ஜி இணைய சேவையை வழங்க உத்தரவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு 1 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

பத்திரிகையாளர் பரஞ்சோய் குணா தகுர்தா அறக்கட்டளை மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது; ஜம்ம காஷ்மீரில் உள்ள குடிமக்கள், நாடு முழுவதும் உள்ள இந்தியர்களுக்குக் கிடைத்துவரும் வசதிகளை இழக்கக்கூடாது. அதாவது பயனுள்ள மற்றும் விரைவான ஆன்லைன் சேவையை இழக்கக்கூடாது. இது கொரோனா பரவலுக்கு எதிரானப் போராட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத கருவி ஆகும்.

மொபைல் இணைய வேகம் தடை செய்யப்படக்கூடாது. ஜம்மு காஷ்மீரில் வசிப்பவர்களைப் பொறுத்தவரை அத்தகைய உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்கு தகுதி உடையவர்களே.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 370வது பிரிவின் கீழ் காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில ஏழு மாதங்களுக்கும் மேலாக இணையசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இணையத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்க உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, காணொலி காட்சி மூலம் அரசாங்கத்திற்கு முறையான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.