சென்னை:

பிரபல திரைப்பட இயக்குனரான பாலசந்தர் நிறுவனமான கவிதாலயா நிறுவனம், கடன் தொகைக்காக, வங்கி மூலம் ஏலம் விடப் படுவதாக செய்திகள் பரவின. இதன் காரணமாக தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

கமல், ரஜினி போன்ற உச்ச நடிகர்களையும், பல்வேறு நடிகைகளையும், தனது பட நிறுவனமான கவிதாலயா நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தி, ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்தும், இயக்கி வெளியிட்டும். சாதனை படைத்தவர் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் பாலசந்தர்.

இவர் கடந்த 2014ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது 84வது வயதில் மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து கவிதாலயா நிறுவனம் சார்பில் எந்தவித படமோ, தொலைக்காட்சி தொடரோ எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கவிதாலயா நிறுவனம், வங்கி ஒன்றில் படம் தயாரிக்க ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்காததால், அவரது நிறுவனம் மற்றும் நிறுவனம் அமைந்துள்ள வீடு ஆகியவை ஏலத்துக்கு வருவதாக வங்கி,  நாளிதழ்களில் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கவிதாலயா நிறுவனம் ஏலத்துக்கு வராது என்று இயக்குனர் பாலசந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுளள அறிக்கையில்,

கவிதாலயா டிவி.தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010-ல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான வேறு சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கியது.

2015-ல் திரைப்பட மற்றும் டிவி தொடர் தயாரிப்புகளை நிறுத்தி டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவு செய்தது. முதலும், வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டது.

மீதமுள்ள கடன் பாக்கியை செலுத்துவதற்கு வங்கியுடன் ஒரே தவணையில் செலுத்த சட்டரீதியாக பேசி வருகிறோம். இந்த சமயத்தில் வங்கியின் விளம்பரத்தை பார்த்து பாலசந்தரின் வீடும், அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டதாக செய்தி பரவிட்டது. இதனால் யாரும் கலக்கம் அடைய வேண்டாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.