படம்: முகநூல் பதிவர் திருவட்டாறு சிந்துகுமார்

பத்தணந்திட்டா:

ம்பை நதியை அசுத்தப்படுத்தினால், ஆறு வருட சிறை தண்டனை என்கிற எச்சரிக்கையையும் மீறி அந்நதியை அசுத்தப்படுத்தி வருகிறார்கள் அய்யப்ப பக்தர்கள்.

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிப்பது வழக்கம். இங்கு குளித்தால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சபரிமலை மண்டல பூஜையை தொடர்ந்து சபரிமலைக்கு வரும் லட்சகணக்கான  பக்தர்கள்  பம்பை ஆற்றில் குளிப்பது வழக்கம். இப்படி குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதோடு, தங்களது உள்ளாடைகள், மாலைகளை ஆற்றில் வீசி எறிவதும் வழக்கமாக இருக்கிறது.

தாங்கள் உடுத்தி வரும் ஆடைகளை தண்ணீரோடு தள்ளிவிட்டால், தங்கள் மீதுள்ள பாவம், தோஷம் விலகி விடும் என்றும்,   புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் பக்தர்கள் தாங்கள் உணவு உண்ணும்  எச்சில் இலைகளையும் பம்பை ஆற்றில் வீசு கிறார்கள். இதனால் பம்பை ஆறு மிகவும் அசுத்தமாகி உள்ளது.

இதை தடுக்கும் நோக்கில், இந்த ஆண்டு பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் ஆகிவயற்றை பயன்படுத்தி பம்பையில் குளிக்கக்கூடாது என்று தடை விதித்து உள்ளது.

மேலும்  தடையை மீறுவோருக்கு ஆறு வருடங்கள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

ஆனால் எச்சரிக்கையையும் மீறி, கோவிலுக்கு வரும்  பக்தர்கள் தங்கள் ஆடைகளை பம்பை நதியில் எறிந்து வருகிறார்கள். பலர் சோப்பு போட்டு குளிப்பதும் நடக்கிறது. இதனால் பம்பை நதி அசுத்தமாவது தொடர்கிறது.

“பக்தர்கள் என்று விதிவிலக்கு அளிக்காமல் பம்பை நதியை அசுத்தப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பம்பை நதியைக் காக்க முடியும்” என்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.