ஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து

Must read

சென்னை: ஆயுத பூஜை – விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக மக்கள் வாழ்த்துவெற்றிமேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களும், வளங்களும் பெறுங்கள் என வாழ்த்தி உள்ளனர்.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள ‘ஆயுத பூஜை’ மற்றும் ‘விஜயதசமி’ வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

நவராத்திரி பண்டிகையின் ஒன்பது திருநாட்களின் இறுதி நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் பக்தியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

நவம் என்றால் ஒன்பது. நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் வெற்றி வேண்டி துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியையும்,கடைசி மூன்று நாட்கள் கல்வி வேண்டி சரஸ்வதி தேவியையும் மக்கள் வழிபடுவார்கள். மகிஷாசுரனை தேவியானவள் ஒன்பது நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே விஜயதசமி.

ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழில் வளம் பெருகிட, மக்கள் அன்னையின் அருள் வேண்டி, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், யந்திரங்களையும் தூய்மைப்படுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

விஜயதசமி தினத்தன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியில் முடிவடையும் என்பது அனைவரது நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று, அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட, எங்களது மனமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

More articles

Latest article