சென்னை: சென்னை திநகரில் உள்ளஅயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றியது  தொடர்பான வழக்கில்  சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தமிழ்நாட்டில் வருமானம் வரும் கோவில்களை தமிழ்நாடு அரசின் அறநிலைத்துறை வசப்படுத்தி அதிகாரிகளைக்கொண்டு நிர்வாகம் செய்து பக்தர்களிடம் இருந்து வருமானத்தை பெருக்கி வருகிறது. அதுபோல, சென்னை திநகரில் உள்ள பஜனை மண்டபமான அயோத்தியா மண்டபத்தையும் அறநிலையத்துறை கைப்பற்றியது.

அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்த மண்டபத்தில் தினசரி பூஜை நடைபெறுகிறது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு முறையான கணக்குகள் இல்லை என்று ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் செயலாளர் புகார் அளித்ததன் அடிப்படையில்,  அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்து, அறநிலையத்துறை வசம் ஒப்படைத்தது.

இதுதொடர்பான வழக்கில், கடந்த மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொண்டது சரியானது தான் என்று உத்தரவிட்டார்.

இதன்பின் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் தரப்பில் மேல்முறையீடு செய்யபப்பட்டது.இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு தேர்தல் மூலம் தேர்வாகும் நிர்வாகிகளைக்கொண்டு நடத்தப்படுகிறது. எந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்களாலும் நடத்தப்படவில்லை” என்று கூறப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவை, தனி நீதிபதி உறுதி செய்துள்ளார். அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. மண்டபம் திறக்கப்பட்டு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இந்த சூழலில்தான், அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தியது. மேலும், அரசு அதிகாரி ஒருவரை நியமனமும் செய்தது. அதையடுத்து, மீண்டும் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

 வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, `எந்த காரணமும் இல்லாது வழக்கைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ஏற்க முடியாது” என்று கூறினார். மேலும், இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

தனி நீதிபதி பின்பற்றிய நடைமுறையும், அறநிலையத்துறை பின்பற்றிய நடைமுறையும் தவறானது என்று கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், அறநிலையத்துறை புதிய அதிகாரியை நியமித்து உரிய விசாரணை நடத்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கியது.  இதற்கான உத்தரவு  இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.