மக்கள் நலக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – முத்தரசன் பேட்டி

Must read

mu
மக்கள் நலக் கூட்டணிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தக் கூட்டணி தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டசபைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது அறிமுகக் கூட்டம் கீழ்பென்னாத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் உள்ளது. இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்று அதிமுக முயற்சிக்கிறது.
கரூரில் ரூ.500 கோடி பிடிபட்டதாக கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் அதிகாரிகளோ வெறும் 4 கோடி தான் பிடிபட்டது என்கிறார்கள். அப்படியானால், உண்மையில் பிடிபட்டது எத்தனை கோடி என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுகிறது என்று மக்கள் நம்பும்படியாக அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சென்ற முறையை விட இந்த முறை சொத்து மதிப்பு இரட்டிப்பாக காட்டியுள்ளனர். இந்த சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது என்று பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, கீழ்பென்னாத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.பானுவிடம், வேட்பாளர் ஜோதி வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article